Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

வீதி விபத்தில் இருவர் பலி, ஐவர் படுகாயம்

Thursday 21st Sep 2017 04:33 AM

Two people were killed in road accident and five were injured

ரொரன்ரோவின் வடக்கே கெஸ்விக் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்ட இந்த விபத்து, றவன்சூ வீதி மற்றும் பூட்பைன் அவனியூ பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது ஆறு வாகனங்கள் தொடர்பு பட்டுள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பில் தமக்கு தொலைபேசி ஊடாக பெருமளவான முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியோரை மீட்பதற்காக உலங்குவானூர்தியின் உதவி கோரப்பட்ட போதிலும், அந்த வேளையில் அவசர மருத்துவ உலங்குவானூர்திகள் அனைத்தும் வேறு உதவிப் பணிகளுக்காக சென்றிருந்தமையால், குறித்த அந்த பகுதிக்கு உலங்குவானூர்திகளை அனுப்பி வைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்து விட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவர்களின் பெயர் வயது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும் அவர்கள் இருவரும் பெரும்பாலும் பெரியவர்கள் என்று சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தின் போது பெருமளவானோர் காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்ட போதிலும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினரின் இறுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் இந்த விபத்து இடம்பெறுவதை நேரில் கண்டோர் அல்லது அது தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்