Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 22வது ஆண்டு ஒன்றுகூடல்

Friday 11th Aug 2017 04:16 AM

The 22nd Annual Meeting of the Old Student Association of Velanai Central College

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடாவின் 22வது வருடாந்த ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆவணி மாதம் 6ம் திகதி) Scarborough
Milliken Parkஇல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் ஆசிரியைகள் அமரர்கள் திருமதி திலகவதி திருஞானசம்பந்தமூர்த்தி திருமதி சொர்ணம்மா சிவசுப்பிரமணியம்; (குமாரசாமி ரீச்சர்) ஆகியோர் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்குச் சங்கத்தின் தலைவர் திரு. சி. இளஞ்செழியன் அவர்கள் தலைமை தாங்கினார்.

வழமைபோல் பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு அன்றைய பொழுதை இன்பமாய்க் கழித்தமை குறிப்பிடத்தக்கது. பிரதம விருந்தினராக வைத்தியக்கலாநிதி வி. சிறீபஞ்சலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆசிரியை திருமதி பு. சின்னையா முன்னாள் ஆசிரியர் திரு சு. கனகநாயகம் எமது சகோதர சங்கமான கொழும்புப் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திரு கந்தப்பு இறைவன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் கா. குகபாலன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Image may contain: 4 people, people smiling, people standing and outdoor

கல்லூரியின் பழைய மாணவிகள் திருமதிகள் கலா செல்வம்; தயா பொன்னம்பலம் கவிதா காந்தன் ஆகியோரது கல்லூரிக்கீதத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் ஓய்வுநிலை ஆசிரியர் திரு ராஜபாலன் றேமன்ட் அவர்கள் சங்கக் கொடியை ஏற்றினார். அடுத்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. விளையாட்டு நிகழ்ச்சிகளை திருமதிகள் யா தனபாலசுந்தரன் சுலோ கந்தவேள் அருணா விஜிதரன் திரு தனபாலசுந்தரன் திரு பு. விஜிதரன் திரு ஜீவன் ஆகியோர் மிகச்சிறப்பாக நெறிப்படுத்தினர். நாள் முழுவதும் பல வகை உணவுகள் வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தது. குறிப்பாக சைவ அசைவ ஒடியற்கூழ் ஆட்டிறைச்சிக்கறி சாம்பாறு சாதம் சோளம் ஐஸ் கிறீம் மேலும் சுவையகம் தயாரித்து வழங்கிய தந்தூரிச்சிக்கன் போன்றவற்றை அனைவரும் மீண்டும் மீண்டும் விரும்பி ரசித்துச் சுவைத்ததுடன் உணவுத் தயாரிப்புக் குழுவினரையும் உணவுப்பரிமாற்றத்தில் ரூடவ்டுபட்டுக்கொண்டிருந்த சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களையும் வெகுவாகப்பாராட்டியவண்ணம் இருந்தனர்.

Image may contain: 4 people, people sitting and outdoor


மாலை நேரப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தலைவர் தனதுரையில் சங்கம் கடந்த ஆறரை ஆண்டுகளாகச் செய்துவரும் ஆற்றல்மிகு சாதனைகள் எல்லாம் கையேடாக
வெளியிடப்பட்டுள்ளதென்றும் மாணவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உகந்த நலத்திட்டங்கள் நீண்டகாலச் சமூகப் பொருளாதார வழி சமைக்கும்
அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் என்று அரிய செயற்பாடுகள் பழைய மாணவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு வருவதனையுங் குறிப்பிட்டார். திரு
குகபாலன் அவர்கள் தனதுரையில் தீவகக் கல்லூரிகளின் கல்விநிலை வீழ்ச்சியடைந்துள்ளதனை தனக்கேயுரிய பாணியில் புள்ளிவிபரங்களுடன் விபரித்ததுடன்
சங்கத்தின் செயற்பாடுகளினால் மீண்டும் பழையநிலையையடையும் என அழகாக எடுத்துரைத்தார். திரு இறைவன் அவர்கள் கொழும்புச் சங்கத்தின் செயற்பாடுகளை
விபரத்தார். திரு கனகநாயகம் அவர்கள் உழைப்பே உயர்வு தரும் என்ற கருத்தைச் சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தினார்.

Image may contain: one or more people, people playing sports, grass, sky, outdoor and nature

திருமதி சின்னையா அவர்கள் தனது கல்லூரிக்காலப் பசுமையான நினைவுகளை நிiவுகூர்ந்ததோடு சங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டும் வண்ணம் உள்ளது என்றார். திரு பஞ்சலிங்கம் அவர்கள் நிர்வாகத்தினரின் குழுவேலைத்திட்டத்தைப் பாராட்டினார்.; சங்கத்தின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்றும் இந்தநிலை தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தலைவரின் நிறைவுரை அவரது உணர்வுகளின் வெளிப்பாட்டை உணர்த்தியதாகப்
பங்குபற்றியோர் பேசிக்கொண்டதுடன் நல்லதோர் நிகழ்வை ஒழுங்குசெய்த நிர்வாகத்தைப் பாராட்டிச் சென்றனர்.

Image may contain: 5 people, people standing and outdoor